செவ்வாய், 15 நவம்பர், 2016

சதாசிவ கோனா மலை - ஒரு தனிமைப் பயணம்

    
    நான் சமீபத்தில் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனா மலை பற்றி கேள்விப்பட்டேன்.  ஒரு நாள் அங்கு செல்ல நான் ஆர்வமாக  இருந்தேன். ஒரு அழகிய சிவன் கோவில் இம் மலை மேல் அமைந்துள்ளதால் இவ்விடத்திற்கு இப்பெயர் வந்தது. (கோனா- மலை என்று பொருள்) கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள நாகலாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நான் மலையேற்றம் செய்திருக்கிறேன்.  இந்த சதாசிவ கோனா மலை நாகலா புரத்தின் மற்றொரு பக்கத்தில் அமைந்துள்ளது. என் அண்டை வீட்டுக் குடும்பம் அக்டோபர் 1 அன்று இக்கோயிலுக்கு சென்று வர திட்டமிட்டிருந்தார்கள். நான் இந்த இடத்திற்கு செல்ல ஆர்வமாக இருந்த விஷயம் அவர்களுக்கு தெரியும்,  அதனால் என்னையும் அவர்கள் கூட வருமாறு அழைத்தார்கள். ஆனால் அடுத்த நாள் எனது நண்பர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தேன் அதனால் நான் அந்த நாளில் அவர்களோடு செல்லவில்லை.







அக்டோபர்  1 அன்று இரவு மற்ற நண்பர்கள் சில காரணங்களுக்காக மலையேற்றம் வர முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நான் தனியாக செல்வதா அல்லது வேண்டாமா என்பதில் சிறிய குழப்பம் இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும்  நான் மலை ஏறுவதற்கு தயாராக சில உணவுப் பொருட்கள் வாங்கி வைத்திருந்தேன். அன்று இரவு கடும் மழை பெய்யத்  தொடங்கியது மேலும் என்னை குழப்பத்தில்  ஆழ்த்தியது, சிறு சிந்தனையோடு இரவு உறங்கச் சென்றேன்.. அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது மழை நின்று விட்டிருந்தது, நான் தனியாக மலையேற முடிவு செய்து, உடனடியாக எழுந்து தயாரானேன். காலை 6.30 மணி அளவில் சதாசிவ கோனா மலை நோக்கி எனது பயணம் தொடங்கியது. ஏற்கனவே அங்கு முகாம் இட்டிருந்த எனது குடும்ப நண்பர்கள்  கூட  அல்லது தனியாக அதே நாளில் மலையேற்றம் செய்து சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தேன்.
சதாசிவ கோனா பற்றி : இறைவன் சிவன் சதாசிவ அவதாரமாக இம் மலை மேல் கோவில் கொண்டுள்ளதால் இவ்விடத்திற்கு சதாசிவ கோனா எனப்பெயர் வந்தது. சிவன் கோவில் மற்றும் அவருடைய மனைவி தேவி காமாட்சி கோவில் அருகே அழகிய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத அனைத்து திங்கள் ஆகிய தினங்கள் முக்கிய திருவிழாக்களாக இங்கே கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில பகுதிகளில் இருந்து வருகை தருகிறார்கள்.
இறைவன் சதாசிவ மற்றும் தேவி காமாட்சி வழிபாடு செய்த கார்வெட்டி நகர ராஜா அவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

சதாசிவ கோனா மலை சென்று அடைவது எப்படி: புத்தூர் பஸ் நிலையம் மற்றும் புத்தூர் ரயில் நிலையம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்கும் ஒரு தனியார் பேருந்து (Sri Sai Bus Service) உள்ளது.. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டும் பஸ் கிடைக்கும். தயவு செய்து பஸ் ஸ்டாண்ட் அருகே தேட வேண்டாம்.

நான் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.40 மணி திருப்பதி உள்ளூர் ரயில் மூலம் புத்தூர் ரயில் நிலையதிற்கு காலை 10.20 மணிக்கு சென்று சேர்ந்தேன். பயணத்தின் இடையே என் காலை உணவு (ரொட்டி) உண்டு முடித்தேன். நான் என் குடும்ப நண்பர் இடம் இருந்து சில தகவல்கள் சேகரித்திருந்தேன்.  T.R.Kandriga (Timma Raju Kandriga) கிராமத்திற்கு பயணிக்க மிக சில பேருந்துகள் மட்டும் உள்ளது அல்லது நாம் ஒரு கார் எடுத்து செல்ல வேண்டும் என்று சொன்னார். கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் அடைய நாம் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். நான் சந்தையில் சில ஆப்பிள்கள் வாங்கி பேருந்துக்கு காத்திருந்தேன். ஆனால் பேருந்து சில நிமிடங்கள் முன் சென்று விட்டதாக உள்ளூர் மக்கள் கூறினர். அதிர்ஷ்டவசமாக நான் அந்த கிராமத்தை அடைய ஒரு பகிர் வண்டி (share Auto) கிடைத்தது.  நான் ஏறி அமர்ந்ததும் மற்ற பயணிகள் இடங்களை நிரப்ப வண்டி காத்திருந்தது. எல்லோரும் என்னை கேட்டார்கள், நீங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் தனியாக போகிறீர்கள்களா? போன்ற கேள்விகளை. இறுதியாக வண்டி புத்தூர் நெடுஞ்சாலை உள்ளே சில கிலோமீட்டர்கள் சென்று, T.R.Kandriga கிராமத்து சாலையில் (15km) பயணித்தது. 30 நிமிடங்களில் பகிர் வண்டி என்னை கிராமத்தில் சென்று சேர்த்தது. வண்டி ஓட்டுனர் ரூ .20 வசூலிக்க நான் ஆச்சரியமடைந்தேன். பொதுவாக நீங்கள் ஒரு தனி வண்டி (Auto) எடுக்க வேண்டும் மற்றும் அவர்கள் ரூ 200 வசூலித்து விடுவார்கள். கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் (2km) நோக்கி நடந்து செல்ல தொடங்கினேன். 

நான் 12.00 மணி அளவில் மலை அடிவாரம் சென்று சேர்ந்தேன். அடிவாரம் அருகே ஒரு பழைய சிவன் கோவில் மற்றும் சிறிய குளம் பார்த்தேன். நான் சிவலயத்தில் பிரார்த்தனை செய்து என் மலையேற்ற பயணத்தை தொடங்கினேன். பாதை தெரியாத காட்டில் முதல் முறையாக தனியாக நடந்து செல்வது புது அனுபவமாக இருந்தது. முதல் நாள் மழை காரணமாக காலநிலை நன்றாக இருந்தது. இயற்கையை ரசித்தபடி அனுபவித்து மலை நோக்கி ஏறிக்கொண்டிருந்தேன். .நான் கைபேசியில் சில புகைப்படங்கள் / சுய புகைப்படங்கள் எடுத்து கொண்டே 1 மணி நேரத்தில் பாதி தூரம் சென்று அடைந்தேன். இங்கே நான் 2 சிறிய லிங்கங்கள் பார்த்தேன். என் மலை யேற்ற பயணத்தின் இடையில் நான் 2 - 3 நபர்கள் மலையிலிருந்து இறங்குவதை  பார்த்தேன், அவர்கள், என்னை அதே கேள்வியை கேட்டார்கள் நீங்கள் தனியாக போகிறீர்களா?. நான் ஆமாம் என்றேன். ஆனால் என் மனதில், கடவுள் இந்த மலையேற்ற பயணத்தில் என்னோடு கூட பயணம் செய்கிறார் மற்றும் நான் தனியாக இல்லை என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் நான் இலக்கை நோக்கி மலையேற தொடங்கினேன், சில நிமிடங்களுக்கு பிறகு நான் என் குடும்ப நண்பர், அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எதிரில் பார்த்தேன். அவர்களும், அதே கேள்வியை கேட்டார்கள் நீங்கள் தனியாக வந்தீர்களா என்று. அவர்கள் மலைபாதை நிலைமையை விளக்கினார்கள். முதல் நாள் மலை மேல் கடுமையான மழை பெய்ததாகவும், அவர்கள் கோவிலில் தங்கி உணவு சமைத்து உண்டதாகவும் சொன்னார்கள். முதல் நாள் மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் நன்றாக தண்ணீர் விழுவதாகச் சொன்னார்கள். அவர்கள் முதல் நாள் மலையேற 5-6 மணி நேரம் ஆனதாகவும், இறங்கும் போதும் அதே 5-6 மணி நேரம் ஆகும் என்று கூறினார்கள். ஆனால் நான் போகும் வேகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் மேலே சென்று சேர்ந்து விடுவீர்கள் என்று சொன்னார்கள். நீங்கள் எப்போது கீழே இறங்குவீர்கள் என என்னை கேட்டார்கள். நான் முடிந்தால் மாலையே கீழே இறங்கிவிடுவேன் என்று அவர்களுக்கு சொன்னேன். அவர்களிடமிருந்து விடைபெற்று மீண்டும் என் பயணத்தை தொடர்ந்தேன்.

மீண்டும் நான் சில நிமிடங்கள் காட்டில் தனியாக நடந்து சென்றேன், சிறிது நேரத்தில் பாதை சற்று சமதளமாக இருந்தது. வழியில் அங்கு சில குரங்குகள் பார்த்தேன். அவைகள் என்னை தொந்தரவு செய்யவில்லை. நான் காட்டில் இயற்கையை ரசித்தபடி பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் ஒலி கேட்டு மகிழ்ச்சியுடன் மரங்கள் அடர்ந்த காட்டின் இடையே நடந்து சென்றுகொண்டிருந்தேன். செல்லும் பாதை (Trail) மிகத் தெளிவாக இருந்தது, நான் எங்கும் திசை மாறிச் செல்ல முடியாது. செல்லும் வழியில் மரங்கள் மற்றும் பச்சை பசேலெனப் புல் நிறைய இருந்தது, வழியில் ஒரு இடத்தில் நான் என் கைபேசியில் வீடியோ எடுத்து கொண்டே நடக்க ஆரம்பித்தேன். இலக்கை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் போது சில நிமிடங்களில் தூரத்தில் தண்ணீர் விழும் ஒலி கேட்டு என் அட்ரினலின் வேகமாக சுரக்க ஆரம்பித்தது, சிறிது வேகமாக நடக்க ஆரம்பித்தேன். என் கைபேசி கேமரா இயற்கையின் அழகை விழுங்கி கொண்டே என்னுடன் பயணித்தது இடையில் நான் ஒரு சிறிய விநாயகர் கோயில் இருந்ததை பார்த்தேன். .  லயத்தில் மணி அடித்து வணங்கி விட்டு கீழே சில படிக்கட்டுகள் இறங்கி சென்றவுடன் பாதை ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி மற்றும் கோவில் அருகில் என்னை இட்டுச் செல்கிறது. நான் 1.45 மணி நேரத்தில் இலக்கை அடைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சதாசிவ கோவிலில் வணங்கி விட்டு சிறிது நேரம் தியானம் செய்தேன். நீர்வீழ்ச்சியின் ஒலி தன் கைகளை நீட்டி என்னை அழைப்பது போல் இருந்தது. உடனடியாக நான் என் உடையை நீக்கி விட்டு உள்ளாடையுடன் நீர்வீழ்ச்சி நோக்கி விரைந்தேன். நீர்வீழ்ச்சியின் குளியல் மசாஜ் செய்வது போல் ஒரு சிறந்த வலி நிவாரணமாக இருந்தது. கோயில் பூசாரி மற்றும் அவரது உதவியாளர் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. நான் என் விருப்பப்படி ஆசை தீர நீர்வீழ்ச்சியில் குளித்தேன். பிறகு என் பையில் வைத்து இருந்த என் மதிய உணவு அவல் சர்க்கரை உண்டு முடித்து, கோவிலில் உட்கார்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தேன்.

கோயில் பூசாரி, நான் இரவு அங்கு தங்குகிறேனா என்று என்னை கேட்டார். நான் இன்னும் எந்த யோசனையும் செய்யவில்லை என்று கூறினேன். சிறிது நேரம் கழித்து நான் அதே மலையில் சிவன் கோவிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காமாட்சி கோவில் சென்று சேர்ந்தேன். காமாட்சி கோவில் அருகிலும் அழகிய ஒரு நீர்வீழ்ச்சி இருந்தது. நான் கோவிலில் உட்கார்ந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். கோவிலில் தியானம் செய்தது எனக்கு புதிய தெம்பை கொடுத்தது. இயற்கை சூழலுடன் நீர்வீழ்ச்சி ஒலி, பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் ஒலி இவற்றின் ரம்மியமான சூழலில் என்னை நானே மறந்துவிட்டேன். இங்கே ஒரு பூசாரி இருந்தார், அவர் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். சிறிது நேரம் அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் காஞ்சி பெரியவர் இந்த மலையில் தங்கி இறைவன் சதாசிவன் மற்றும் தேவி காமாட்சி பூஜை / வழிபாடு செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். T.M.சேஷன் மற்றும் ஆர் வி வெங்கட்ராமன் போன்ற முக்கிய பிரமுகர்கள் மகா பெரியவருக்கு உணவு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்போது நேரம் மாலை 5.30 மணி, வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது. கோயில் பூசாரி, இன்றிரவு நான் அங்கு தங்குகிறேனா என்று என்னை கேட்டார். மற்றும் நீங்கள் எதுவும் உணவு உட்கொண்டீர்களா? என்று கேட்டார். கோவிலின் ரம்மியமான சூழல் நான் அங்கேயே வாழ்நாள் முழுதும் தங்கி விட வேண்டும் என்று ஒரு உணர்வு எனக்குள் எழுந்தது, எதையும் சிந்திக்காமல் பூசாரியிடம் 'ஆம்' என்று கூறினேன். இரவாகிக்கொண்டிருந்தது, கோவிலில் தனியாக உட்கார்ந்து இயற்கையை ரசித்தபடி அமர்ந்திருந்தேன். நான் இரவு அங்கு தங்க போகிறேன் என்று என் வீட்டில் தகவல் சொல்லவில்லை. கைபேசி அங்கு சிக்னல் கிடைக்காததால் செயல்படாது. ஆனால் நான் இந்த கோவிலுக்கு செல்கிறேன், என் அண்டை வீட்டுக் குடும்பம் அங்கு ஏற்கனவே தங்கி உள்ள விஷயம் அவர்களுக்கு தெரியும்,  எனவே நான் அங்கு தங்க கவலைப் படவில்லை.

இரவு 8.00 மணி அளவில் உணவு உண்டு முடித்து அமர்ந்திருந்தேன். பூசாரியின் உதவியாளர் எனக்கு இரவு தூங்க ஒரு பாய் கொடுத்தார். மாலை இங்கே சில குரங்குகள் எங்களுக்கு தொந்தரவு கொடுத்தன. இரவில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் என்னை தூங்க விடாமல் தொல்லை கொடுத்தன. கொசு கடியின் இடையே நான் சிறிது நேரம் தூங்கினேன்.

காலை 6.00 மணி அளவில் கண் விழித்தேன். காலை கடன்களை முடித்து அருவியின் கீழே உள்ள குளத்தில் குளித்து புத்துணர்ச்சியுடன் காமாட்சி கோவிலில் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தேன். சிறிது நேரம் கழித்து காமாட்சி கோவிலில் இருந்து மீண்டும் சிவன் கோவில் சென்று சேர்ந்தேன். மறுபடியும் சிவன் கோவில் அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஆசை தீர குளித்தேன்.  7.00 மணி அளவில் சிவபெருமானின் அனுமதி பெற்று மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். 

சூரிய ஒளி மேலெழுந்து வெப்பம் என்னை தாக்கும் முன் கீழிறங்க விரும்பினேன். அதனால் சிறிது வேகமாக நடக்க ஆரம்பித்தேன், மீண்டும் 1.45 மணி நேரத்தில் மலை அடிவாரம் சென்று அடைந்தேன். பயணத்தின் இடையில் நான் 2 - 3 நபர்கள் மலை ஏறுவதை  பார்த்தேன், மது அருந்தவும், மாமிசம் சமைத்து சாப்பிடவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் மக்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள்.  இந்த இடத்திற்கு வருகை தரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.  ஆனால் அரசாங்கம் இந்த மலையை பாதுகாக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஒரு சுற்றுலாத்தளம் போல மலையெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் நிறைய பார்த்தேன். 8.45 மணி அளவில் மலை அடிவாரம் சென்று அடைந்தேன். என் பையில் வைத்து இருந்த காலை உணவு (ரொட்டி) உண்டு முடித்தேன்.
கிராமத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தேன். நான் அந்த கிராமத்தை அடையும் போது ஒரு பகிர் வண்டி (share Auto) கிராமத்தை விட்டு நகருவதை பார்த்தேன். நகரும் வண்டியை நான் நிறுத்துமாறு கத்திகொண்டே ஓடினேன். பகிர் வண்டி டிரைவர் என் குரல் கேட்டு சில கெஜ தூரம் சென்று பிறகு நிறுத்தினார். உடனே ஓடி சென்று ஆட்டோவில் ஏறினேன். புத்தூர் ரயில் நிலையம் நோக்கி பகிர் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. மலை மெதுவாக எனக்கு பின்னால் நகர்ந்து என் பார்வையில் இருந்து சிறியதாக ஆரம்பித்தது. ஆனால் இன்னும் என் மனதில் அந்த நினைவுகள் பசுமையாக  உள்ளன.

மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி நான் என் இரண்டு நண்பர்களுடன் இந்த இடத்திற்கு ஒரு நாள் சென்று வந்தேன்.


. 

கருத்துகள் இல்லை: