செவ்வாய், 30 ஜூலை, 2013

திருவண்ணாமலை - எனது தீப தரிசன மலையேற்ற அனுபவம் (டிசம்பர் 2012)

எனக்கு கார்த்திகை தீபம் நாளன்று திருவண்ணாமலையில் தீப தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கார்த்திகை தீப நாளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பத்து நாள் திருவிழாவின் ஒரு வார இறுதி நாளன்று (ஞாயிறு, டிசம்பர் 2 ஆம் தேதி) நாங்கள் கார் மூலம் செல்ல முடிவு செய்தோம். என் நண்பர்களில் ஒருவர் வெங்கடேஷ், அவரிடம் கார் உள்ளது. நாங்கள் மூன்று பேரும் (நான், வெங்கடேஷ் மற்றும் பாஸ்கர்) காலை 6 மணி  அளவில் ஒரு பொதுவான இடத்தில் கிண்டி அருகே சந்திக்க முடிவு செய்தோம்.




நான் காலையில் 5 மணி அளவில் மற்ற 2 பேர்களை தொலைபேசி மூலம் அழைக்க முயற்சி செய்தேன். பாஸ்கர் 5 மணி அளவில் என்னை அழைத்து தயாராக இருப்பதாக சொன்னார். ஆனால் வெங்கடேஷ் அழைப்பை எடுக்கவில்லை. நான் காலை உணவு மற்றும் மதிய உணவு செய்து எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன். நேரம் 6.00 மணி மீண்டும் தொலைபேசி அழைப்பை வெங்கடேஷ் எடுக்கவில்லை.  நாங்கள் இரண்டு பேரும்(நான் மற்றும் பாஸ்கர்) பஸ் மூலம் திருவண்ணாமலை செல்ல முடிவு செய்து, CMBT செல்ல எனது பைக் ஸ்டார்ட் செய்த போது, அலைபேசி அழைப்பு ஒலித்தது, வெங்கடேஷ் அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வருவதாக சொன்னார்.  நாங்கள் எங்கள் திட்டப்படியே கிண்டி அருகே சந்திக்க முடிவு செய்தோம். நான் மற்றும் பாஸ்கர் 7:00 மணி அளவில்  கிண்டி சென்று சேர்ந்தோம். சில போக்குவரத்து காரணங்களுக்காக வெங்கடேஷ் 7:20 மணி அளவில்  அங்கு வந்து சேர்ந்தார். இறுதியாக 7:30 மணி அளவில் எங்களது திருவண்ணாமலை பயணம் கார் மூலம் அங்கு இருந்து தொடங்கியது.



நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்வது ஒரு அற்புதமான அனுபவம். வெங்கடேஷ் ஒரு தேர்ந்த கார் ஓட்டுனர், போல் காரை வெகு இலகுவாக ஓட்டிச்சென்றார். காலை 9 மணி அளவில் மதுராந்தகம் அருகே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி எங்களது காலை சிற்றுண்டியை முடித்தோம். 

நாங்கள் 11:00 மணி அளவில் திருவண்ணாமலை கோவிலை சென்று சேர்ந்தோம் எங்கள் காரை நிறுத்த ஒரு இடம் கண்டுபிடிக்க எளிதாக இல்லை. கோவில் அருகில் எங்கள் காரை நிறுத்த முயற்சி செய்து 15-20 நிமிடங்கள் சுற்றி இறுதியாக வடக்கு கோபுரம் நுழைவாயில் அருகிலுள்ள இடத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். முகம் கை கால்கள் கழுவி அண்ணாமலையாரை தரிசனம் செய்ய கோவிலுக்கு உள்ளே சென்றோம். அண்ணாமலையாரை தரிசனம் செய்து பிறகு உணவு அருந்தினோம். அப்போது மதியம் 1.30 மணி ஆகும். கிரிவலம் செல்வோமா அல்லது மலையேறி தீப தரிசனம் செல்வோமா என்று பேசிக்கொண்டிருந்தோம். நேரம் குறைவாக உள்ளதால் கிரிவலமும் தீப தரிசனமும் ஒரே நாளில் செய்ய முடியாது இறுதியாக நாங்கள் மகா தீபம் அருகில் பார்க்க மலை ஏற முடிவு செய்தோம். 



தண்ணீர் மற்றும் உணவு பை சுமந்து கொண்டு மதியம் 2.00 மணி அளவில் திருவண்ணாமலையில் தீப தரிசனம் செய்ய எங்கள் பயணம் தொடங்கியது. யாரோ நாங்கள் மலை மீது காலணிகள் அணிந்து செல்லக்கூடாது என்றார்கள். ஆனால் எங்களுக்கு காலணிகள் இல்லாமல் ஏற எளிதாக இல்லை. எனவே காலணிகளுடன் நடக்க முடிவு செய்தோம். முதலில் நாம் ஏறும் போது ஒரு சாதாரண படி இருந்தது, அதன் பிறகு அது ஒரு  கடினமான பாறைகள் நிறைந்த மலைப்பாதையாக தொடர்ந்தது.  நாங்கள் சோர்வாக இருக்கும் போது தண்ணீர் குடித்து சிறிது ஓய்வு எடுத்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். இடையில் நாங்கள் கீழே செல்லும் மக்கள் சிலரை தொலைவை பற்றி கேட்டதற்கு அவர்கள் அருகில் தான் உள்ளது என்றார்கள். ஆனால் அது நடக்க நடக்க சென்று கொண்டே இருக்கிறது .... பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். பின்னர் அவர்கள் இலக்கை அடைவதற்கு நம்மை ஊக்குவிக்கும் விதமாக சொன்ன பதிலே என்று உணர்ந்தேன். ஆனால் பாதி வழியில் ஒருவர் நீங்கள் ஏற முடியவில்லை என்றால், இப்போதே முடிவு எடுத்து இங்கு இருந்து திரும்ப இறங்கி விடுங்கள், இல்லையென்றால் நீங்கள் அவதிப்படுவீரகள் என்று கூறினார். இந்த பலவீனமான நபர் (மலைகள் ஏறும் அனுபவம் இல்லாதவர் அல்லது அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) சொன்ன நம்பிக்கை இழக்க வைக்கும் பேச்சு என்னை சற்று கோபப்படுத்தியது. நான் உடனே எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு மற்றும் மலை ஏறிய அனுபவம் உண்டு ஆதலால் மலை ஏறாமல் திரும்ப செல்ல மாட்டேன் என்றேன். (எனக்கு ஏற்கனவே மலைகள் சில ஏறிய அனுபவம் உண்டு).  மற்றும் நீங்கள் இது போல். நம்பிக்கை இழக்க வைக்கும் மாதிரி பேசாதீர்கள் என்றேன். பின்னர் அவர்கள் தங்கள் வாயை மூடிக்கொண்டு கீழே சென்று விட்டார்கள். 




நாங்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்காமல் அடிக்கடி சிறிது ஓய்வு எடுத்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். 4:30  மணி அளவில் மலை மேல் சென்று சேர்ந்தோம். மகா தீபம் சென்று அடைய எங்களுக்கு ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் ஆனது.



மலை மேல் வீசிய சில்லென்ற காற்று எங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. மலை எங்கிலும் மூலிகைகள் நிறைய இருந்தன, ஆனால் எங்களுக்கு அவற்றின் பெயர் தெரியாது. யாரோ ஒருவர் மலை ஏறும் வழியில் சர்க்கரை வில்வம் ஒரு மூலிகை கொடுத்து சுவைக்க கூறினார். அந்த இலை மிகவும் இனிப்பாக இருந்தது. மலை ஏறும் வழியில் நாங்கள் வெளிநாட்டவர்கள் சிலரை சந்தித்தோம். ஒரு வெளிநாட்டவர் மலை  மீது. கடவுள் சிவன் மீது சம்ஸ்கிருத பக்தி பாடல்கள் பாட தொடங்கி  விட்டார்.



நாங்கள் மேலே சென்ற போது தீபம் அணைக்கப்பட்டிருந்தது. கோவில் ஊழியர்கள் செப்பு கொப்பரையில் அதிக அளவில் கற்பூரம், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி துணியாலான திரி கொண்டு ஒரு பெரிய தீபம் ஏற்ற தயார் செய்து கொண்டிருந்தனர்.. செப்பு கொப்பரை 3 டன் எண்ணெய் கொள்ளளவு உள்ளது கோவில் ஊழியர்கள் மாலை 6.00 மணி அளவில் தீபம் ஏற்றப்படும் என்று கூறினர். நாங்கள் சூரியன் மறையும் முன் மலை மேல் சென்று தீப தரிசனம் செய்த பிறகு உடனடியாக கீழே வரும் முடிவு செய்திருந்தோம். ஆனால் தீபம் ஏற்ற நேரம் ஆகும் என்பதால் அங்கு காத்திருக்க முடிவு செய்தோம். நான் தயாரித்து கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்டோம். உணவு உண்ட பிறகு எங்களுக்கு சற்று தெம்பு வந்ததாக உணர்ந்தோம். 

சரியாக 6.00 மணி அளவில் மகா தீபம்  ஏற்றப்பட்டது. மலை எங்கிலும் "ஹரஹரா", "ஹரஹரா" என்ற ஒலி  பிரதிபலித்தது. அந்த இடத்தில் இப்போது ஒரு ஆன்மீக அலை நிரப்பப்பட்ட அனுபவமாக இருந்தது. தீப தரிசனம் செய்த பிறகு நாங்கள் மலையில் இருந்து கீழே  இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்க மிகவும் கடினமாக இருந்தது, ஏனெனில் பாதை மிகவும் பாறை  நிறைந்ததாகவும் மற்றும் சூரிய ஒளி  குறைந்து கொண்டே இருந்தது, மெதுவாக நாங்கள் மலையில் இருந்து கீழே  இறங்க ஆரம்பித்தோம். எனது தொடை மற்றும் முழங்கால் பகுதி தசை பிடிப்புகள் காரணமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இறுதியாக நாங்கள் 8.00 மணியளவில் மலையில் இருந்து கீழே வந்து சேர்ந்தோம் . நாங்கள் சிறிது ஓய்வெடுத்து முகம் கை கால்கள் கழுவி 8:45 மணியளவில், சென்னை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. இரவு 11:45 மணியளவில் நாங்கள் சென்னை (கிண்டி) வந்து சேர்ந்தோம்.



கால் வலி எல்லோருக்கும் 3 நாட்கள் நீடித்தது ஆனால் திருவண்ணாமலை தீப தரிசனம் மற்றும் மலையேற்ற நினைவுகள் எப்போதும் நீண்ட காலம் இருக்கும்.

திருவண்ணாமலை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்:

திருவண்ணாமலை சென்னையில் இருந்து 185 கி.மீ மற்றும் பெங்களூரில் இருந்து 210 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மலை சுமார் 2.669 அடி உயரம் ஆகும். தென்பெண்ணை  ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணை திருவண்ணாமலை அருகே உள்ள சுற்றுலா தலமாகும். திருவண்ணாமலையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள செஞ்சி கோட்டைமற்றொரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.

திருவண்ணாமலை பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் பஞ்சபூத தலமாகும் . சிதம்பரம், ஸ்ரீகாலஹஸ்தி , திருவானைக்காவல் மற்றும் காஞ்சிபுரம் முறையே ஆகாயம் , காற்று, நீர் மற்றும் பூமி குறிக்கும் மற்ற பஞ்சபூத தலங்களாகும். திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு பிரம்மோத்சவங்ள்  கொண்டாடப்படும், இதில் மிகவும் புகழ்பெற்றது கார்த்திகை (நவம்பர் / டிசம்பர்) மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் ஆகும். கார்த்திகை தீபம் பத்து நாள் கொண்டாடப்படும் நிகழ்வு ஆகும். அன்று மாலை நேரத்தில் ஒரு பெரிய கொப்பரையில்அண்ணாமலை மலை மேல் மூன்று டன் நெய் ஊற்றி பெரிய விளக்கு ஏற்றப்படும்.

ஒவ்வொரு பௌர்ணமி முழு நிலவு இரவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலை மலையை சுற்றி கிரிவலம்  வந்து சிவ வழிபாடு செய்வர்கிரிவலம் பாதை 14 கிமீ தூரத்தை  உள்ளடக்கியது. தமிழ் காலண்டர் ஆண்டில் வருடாந்திர சித்ரா பௌர்ணமி (முழு நிலவு) இரவு, உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித நகரம் வருகை தருவார்கள் .

குரு ரமண மகரிஷி ஐம்பது மூன்று ஆண்டுகள், 1950 ஆம் ஆண்டில் அவர் தனது பூதவுடலை விடும் வரை திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அவரது ஆசிரமம் அண்ணாமலை மலை அடிவாரத்தில் மேற்கே அமைந்துள்ளது.


கார்த்திகை மகா தீப விழா

கார்த்திகை மகா தீபம் திருவண்ணாமலை மற்றும் வட ஆற்காடு பகுதியில் ஒரு பெரிய திருவிழா ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி நாள் அன்றும் 5 லட்சம் மக்கள் திருவண்ணாமலை வருகை தருவார்கள், கார்த்திகை மகா தீபவிழா நடைபெறும் 10 நாட்கள் திருவண்ணாமலையில், 80 - 90 லட்சம் மக்கள் வரை வருகை தருவார்கள். கார்த்திகை தீபம் நாளில் 2900 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நேரத்தில் திருவண்ணாமலை அதன் உயர் ஆன்மீக நிலையை அடைகிறது இந்த பெரும் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.


இந்த பெரும் திருவிழாவின்  தத்துவ உண்மை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்:
பிரம்மா மற்றும் விஷ்ணு தங்கள்  தங்களது மேன்மையை பற்றி இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இதற்கு ஒரு முடிவை கொடுக்க, அவர்கள்  பொறாமையை  அழிக்க சிவன் ஒளிவீசும் பெரிய மலை வடிவில் அவர்களுக்கு முன் தோன்றினார். இரண்டு பேரும் சிவனுடைய அடியையும் முடியையும்  கண்டுபிடிக்க முயற்சி செய்து அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள் இரண்டு பேரும் சிவனடைய கருணை பார்வையை வேண்டினர். அவர் கார்த்திகை மாதம் கார்த்திகை நாள் ஒவ்வொரு ஆண்டும் மலை மேல் ஜோதி வடிவில் தோன்றுவேன்   என்று அவர்களை ஆசிர்வதித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கார்த்திகை தீப திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் நடத்தப்படுகிறது.




நெருப்பு எப்படி எல்லாவற்றிலும் உள்ள அசுத்தத்தையும் அழிக்கிறதோ  அதே  போல், கடவுள் மனிதர்களில் உள்ள அறியாமை மற்றும் தற்பெருமை எனும் இருள் அழிக்க, ஞானம் எனும் ஒளி மூலம் அவர்களை ஆசிர்வதிக்கிறார்,  இதுவே  இந்த திருவிழாவின் பின்னால் உள்ள தத்துவ உண்மை.


மலை மேல் ஒரு பெரிய செப்பு கொப்பரையில் நிறைய கற்பூரம், நெய் மற்றும் துணியாலான திரி கொண்டு ஏற்றப்பட்டும் பெரிய தீபம்பல மைல்கள் அப்பால் இருந்து பார்த்தாலும் தெரியும். நம் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் இதுபோல் ஒரு பெரிய தீபம் இல்லை. கோவிலில் உள்ள பதினோரு அடுக்கு கோபுரத்திலும் அகல் விளக்கு வரிசையாக ஏற்றப்படும்இந்த திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பு என்றாலும், இது தமிழ் நாட்டில் விஷ்ணு கோயில்கள் உள்ளிட்ட தென் இந்தியாவின் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் கூட அழகான வரிசைகளில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் அலங்கரிக்கின்றன


எனது ஆங்கில வலைப்பதிவு http://interestingindianravi.blogspot.in/2012/12/trekking-to-thiruvannamalai.html

எனது ஹிந்தி வலைப்பதிவுhttp://merabharatmahan-ravisankar.blogspot.in/



திங்கள், 22 ஜூலை, 2013

பர்வதமலை மலையேற்றப் பயணம் – (செப்டம்பர் 2011)

சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பர்வத மலை பற்றி நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே அதைப்பற்றி விவரங்கள் சேகரித்தேன்.  பர்வத மலை, திருவண்ணாமலை மற்றும் போளூர் அருகிலுள்ளது. பர்வத மலை திருவண்ணாமலையில் இருந்து 37 KM – ம், போளூர்-ல் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


எனது நண்பனை பர்வத மலை செல்ல துணைக்கு அழைத்தேன்.  அவரும் வர சம்மதித்து, அவரும் நானும் சேர்ந்து பர்வத மலை செல்ல முடிவெடுத்தோம். பேருந்தில் திருவண்ணாமலைக்கு மாலை 7.00 மணி அளவில் சென்று சேர்ந்தோம்.




திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறிது நேரத்தில் தரிசனம் செய்தோம்.  பர்வத மலை செல்ல திருவண்ணாமலையில் இருந்து பஸ் மூலம் தென்மாதி மங்கலம்(தென்மகாதேவமங்கலம்) கிராமத்தில் இரவு 10.00 மணி அளவில் சென்று சேர்ந்தோம். தென்மாதி மங்கலம் பர்வத மலையின் அடிவாரம் ஆகும்.  மலை ஏற மூன்று வழிகள் உள்ளன.  ஒன்று தென்மாதி மங்கலம் வழியாகவும், இரண்டாவது மாம்பாக்கம் வழியாகவும், மற்றொரு வழி கடலாடி  அருகிலுள்ளது. இரவு நேரம் இந்த மலை ஏற சிறந்த நேரம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் காலநிலை குளுமை என்பதால் நாம் களைப்படையமாட்டோம் என்பதாலும் இரவில் ஏற முடிவு செய்தோம். நாங்கள் பர்வத மலை முதல் முதலாக செல்கிறோம் ஆனால் மனதில் ஒரு திட நம்பிக்கையுடன் சென்றோம். தென்மதிமங்கலம் செல்லும் போது முன் பின் அறியாத ஒரு நபரை (நண்பர்) சந்தித்தோம்.  அவர் நன்றாக பர்வத மலை பற்றி அறிந்தவர் மேலும் பர்வத மலை பலமுறை சென்றவர், அதனால் அவரின் வழிகாட்டுதலின் படி நடப்பது என்று முடிவு செய்தோம். தென்மாதிமங்கலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக மலையின் அடிவாரம் சென்று சேர்ந்தோம். குளித்து விட்டு மலையேறினால் புத்துனர்சியாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால், பொது குளியலறையில் 5 ரூபாய் கொடுத்து குளித்து முடித்தோம்.   (மலை அடிவாரத்தில் குளிப்பதற்கும், காலைக் கடன்களை முடிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது)


இரவு 11.30 மணி அளவில் மலையை நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது. தண்ணீர், பிஸ்கட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய் இன்னபிற பூஜை பொருட்களுடன் டார்ச் லைட் சகிதம் காலில் செருப்பு அணியாமல் (செருப்பு அணியக்கூடாது) மலையேற ஆரம்பித்தோம். மலை மேலே திருப்பணிகள் நடைபெற்று வருவதால் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். 


பர்வதம் என்றால் மலை, பர்வத மலை என்று அழைக்கப்படும்  இது மலைகளின் ராணியாக விளங்கும் பர்வத ராணி அல்லது பர்வதம்மாள் என்கிற இறைவி வசிக்குமிடம். பர்வத ராணி சக்தி அம்சமாகவும் மற்றும் 'சிவ' அம்சமாக இறைவன் மல்லிகார்ஜுனர் வடிவிலும் மலை உச்சியில் வீற்றிருக்கின்றனர்.  இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். இறைவி பர்வத ராணி, பிரம்மராம்பிகா என்றும்   அழைக்கப்படுகிறாள். 


கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்று தெரியாது, கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள   கடப்பாரை  மலை என்ற செங்குத்து பாறை மலை மேல், ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'மா மன்னன்' என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்றும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 


ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.  அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.


மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு அற்புதமான காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது  . மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கை அழகை கண்டு இரசிக்கலாம்  (மேகங்கள் இல்லாத போது) கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த மலை மேல் அரிய மூலிகை தாவரங்கள் நிறைய  காணப்படுகிறது. இமயமலை தவிர மற்ற மலைகள் மேல் அவை காணப்படுவதில்லை. பக்தர்கள் மலை மேல் ஏறும்போது அல்லது கீழே வரும் போது எளிதாக 'மூலிகை காற்று' வாசனையை உணரலாம் . 'மூலிகை காற்று' நம் மீது பட்டால் பல நோய்கள் தானாகவே குணமாகி விடும் என்று  கூறப்படுகிறது.


சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரம் ஆனது. வழியில் சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்(தற்காலிக கடைகள்) இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், இட்லி எல்லாமே கிடைக்கும். இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். அதற்குள் டி சர்ட் பனியன் ஆகியவை தெப்பமாக நனைந்துவிட அவற்றையும் கழற்றிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். வழியில் சில இடங்களில் சில நிமிடம் ஓய்வெடுத்தோம். அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்.


வழியில் காட்டு விலங்குகள் அல்லது விஷ பூச்சிகள் என்று எதுவுமிருப்பதாக தெரியவில்லை. வயதான மக்கள் கூட மன உறுதி இருந்தால் மலை மீது ஏறிட முடியும்.  இதுவரை பர்வத மலை வரலாற்றில், பக்தர்கள் கீழே விழுந்து மற்றும் மரணம் சந்தித்ததாக எந்த பதிவும் இல்லை. 


சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வதுண்டு. அவர்களை சாதாரணமாக பார்க்க முடியாது.  அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி , சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம் அவர்கள் கடப்பதை அறியலாம். சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர் (நாய்), போன்ற வடிவத்தில் உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறும் வரை காட்சி கொடுப்பார்கள்.

நாங்கள் மலை ஏறும்போது, மழை பெய்ய தொடங்கியது, எங்களுக்கு சில அடி தொலைவில் ஒரு நாய் குரல் கேட்டது அது எங்களுக்கு அருகில் தங்குமிடம் உள்ளது என்பதை உணர்த்துவதாக இருந்தது.  நாங்கள் அந்த மழையில் நனைந்தவாறு சிறிது மேலேறியவுடன் சிறு தங்குமிடம் காணப்பட்டது. சில நாய்கள் அங்கு பார்த்தேன், பக்தர்கள் பாதை தவறி விட்டால் இந்த நாய்கள் நமக்கு வழிகாட்டும் என்றார்கள். இரவு பக்தர்களுக்கு வழிகாட்ட பாறைகள் மற்றும் சில மரங்களில் வழி காட்டும்  அம்பு குறிகள் பார்த்தேன்.


முதல் முறை ஏறும்  போது  3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் எடுக்கும். முன்பு மக்கள் இந்த மலை மீது முழு நிலவு இரவு மட்டும் ஏறினார்கள். இப்போது மக்கள் ஒவ்வொரு வார இறுதிகளில் மற்றும் அனைத்து முக்கியமான நாட்களில் கூட ஏறுகின்றனர் .

பின்பு கரடுமுரடான, கற்கள் நிறைந்த மலைப்பாதையில் (மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் நீரோடை பாதை வழியே) ஒருமணி நேரம் நடந்தோம். சில நிமிடங்களில் கடப்பாரைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள்.அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டுதான் ஏற வேண்டும். அந்த சமயத்தில் மேலே ஏறிக் கொண்டிருந்தது நாங்கள் 3 பேர் மட்டுமே.



இந்த கடைசி பகுதி மலையேறுதல் சற்று கடினமாக இருக்கும். நாங்கள் அதிகாலை 3.40 மணி அளவில் கோவிலை சென்று சேர்ந்தோம். அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் மிக வெண்மையாக மிக அழகிய காட்சியாக இருந்தது. ஆலயத்தின் உள்ளே ஏற்கனவே இருந்த பக்தர்கள் வெளியேறியபின் சற்று நேரம்கழித்து உள்ளே சென்றோம். கோவிலில் கதவுகள் மற்றும் பூசாரி இல்லை. வட இந்தியா போன்று, இங்கே மக்கள் தாங்களே அபிஷேகம் பூஜைகளை' செய்யலாம். நண்பர் அவரே ஸ்லோகங்கள் சொல்லி அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த பூஜை பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபட்டோம். அமைதியான அந்த சூழலில் நாங்கள்  சிறிது நிமிடம் தியானம் செய்தோம்.

பூஜைக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்து காலை 6 மணியளவில் கீழே இறங்க ஆரம்பித்தோம். இரவில் நாங்கள் மேலே ஏறும்  போது  வழி ஓரளவு ஆபத்தானது என்று தெரியவில்லை. ஆனால் பகலில் கீழே இறங்கும் போது தான் தெரிகிறது, நாங்கள் கடந்து வந்த பாதை ஓரளவு ஆபத்தானது என்று. முதல்  சில கிலோமீட்டர் தொலைவு சமதள பரப்பாகவும், இரண்டாவது சில கிலோமீட்டர் படிப்பாதையாகவும் , மூன்றாவது சில கிலோமீட்டர் தொலைவு மலைப்பாறை பாதையாகவும் மற்றும் நான்காவது கடப்பாரை பாதையாகவும் (500 அடி) இருந்தது (இது மிகவும் கடினமான உள்ளது).



பர்வத மலை மீது ட்ரெக்கிங் (மலையேற்றம்) சென்று வந்த பிறகு குறைந்தது 2 நாட்களுக்கு, கால்வலி இருக்கும். நாங்கள் இறுதியாக காலை 10.00 மணி அளவில் கீழே வந்து  சேர்ந்தோம்.



எனது ஆங்கில வலைப்பதிவு : http://interestingindianravi.blogspot.in
எனது ஹிந்தி வலைப்பதிவு : http://merabharatmahan-mountabu.blogspot.in/