செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மேகத்தை தழுவும் மலையும் வாகை சூடிய மண்ணும்...


நான் முன்பு ஒவ்வொரு பயணத்தின் பொழுதும் என்னுடைய பயணத்தை வலைப்பதிவிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சில காரணங்களுக்காக எழுதுவதை  நிறுத்தியிருந்தேன். எனது பைக்கிங் நண்பர்கள் எழுதுவதை பார்த்த உடன் என்னை இந்த வலைப்பதிவை எழுதும்படி செய்தது.

எனது முதல் நீண்ட தூர  பைக்கிங் (பின்னிருக்கை சவாரி) அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக இந்த வலைப்பதிவை எழுதுகிறேன்.

நான் முன்பு CTC (Chenai Trekking Club) உடன் மலையேற்றம் மற்றும் குறைவான தூர பைக்கிங் சிலவற்றில் பங்கேற்றிருக்கின்றேன். ஆனால் இது தான் எனது முதல் நீண்ட தூர  பைக்கிங் (பின்னிருக்கை சவாரி) அனுபவம். (1400km)





ஜனவரி மாதம் முதல் தேதியன்று குமார பர்வதம் மலையேற்றம் சென்றிருந்தேன். பிறகு ஜனவரி 2 ம் வாரத்தில் கன்னியாகுமாரி மற்றும் ராமேஸ்வரம் பெற்றோர்களுடன் சென்றிருந்தேன். அதனால் பண நெருக்கடி இருந்ததால் குடியரசு தினத்தன்று எனது நண்பர்கள் மலையேற்றத்திற்கு  அழைத்த போது மறுத்தேன். பிறகு வேறொருவர் தர வேண்டிய பணம் திடீரென்று வந்ததால் நான் மலையேற்றத்திற்கு தயாரான போது, அவர்கள் திடடம் ரத்தாகியிருந்தது. அப்பொதுழுது தான் CTC இடமிருந்து குடியரசு தின பைக்கிங் மேகமலை - வாகமனிற்கு செல்வதற்காக ஒரு குழு அழைப்பு மின்னஞ்சல் வந்தது. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பைக் பயணத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்தேன்.  (பின் குறிப்பு: முன்பு பதிவு செய்த பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன சில காரணங்களால் L ) பதிவு செய்து 2 நாட்கள் ஆன பிறகும் அழைப்பு மின்னஞ்சல் வராததால் அழைப்பிலிருந்த கதிர் அலைபேசி எண்ணை அழைத்தேன். அவருடன் அளவளாவிய பிறகு தான் தெரிந்தது, அவர் எனக்கு முன்பே அறிமுகமானவர் என்று. ஆனால் அவர் என்னை மறந்திருந்தார். அவர் சொன்னார், இன்று இரவு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு மின்னஞ்சல் வரும் என்று. செவ்வாய் அன்று இரவு 11.30 மணி அளவில் அழைப்பு மின்னஞ்சல் வந்தது மற்றும் அதில் என் பெயரும் இருந்தது. என்னை தேர்ந்தெடுத்தற்காக CTC அமைப்பாளர்களான தினேஷ் மற்றும் கதிர் ஆகியோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.


பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு Whatsapp குழு உருவாக்கப்பட்டது,  பைக் அடிப்படை உபகரணங்கள் மற்றும் சவாரி செய்யும் போது எடுத்துச் செல்ல வேண்டியவை, பயணம் பற்றிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அமைப்பாளர்கள் தெளிவாக விளக்கினார்கள். 25 ஜனவரி, வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் சந்திப்பதற்கும், அங்கிருந்து பயணத்தைத் துவங்கவும் திட்டமிடப்பட்டது. முழங்கால்களில் பாதுகாப்பு கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால் என்னையும் சேர்த்து  பெரும்பாலோர் கடைசி நிமிடத்தில் அதை வாங்க வேண்டியிருந்தது. சரத் எனக்காக அதை தருவதாக ஒப்புக்கொண்டதால் எனக்கு சற்று நிம்மதி வந்தது.

25.01.18 வியாழக்கிழமை மாலை (170 KM)

இளமுருகு தி.நகரிலிருந்து என்னை தாம்பரம் ரயில் நிலையம் அழைத்து செல்ல தயாராக இருந்தார். வியாழக்கிழமை மாலை மிகவும் உற்சாகத்துடன் நான் 5:55 மணி அளவில் இளமுருகு RE பைக்கில்  தாம்பரம் ரயில் நிலையம் (பயணம் தொடங்கும் இடம்) அடைந்தேன். அங்கு நான் தாமு, பிரபாகர்  மற்றும் பரணி சார் அவர்களை சந்தித்தேன். பின்னர் மற்றவர்களுக்காக காத்திருந்தோம்…….

அனைவரும் ஒருவழியாக மாலை 7.30 மணியளவில் வந்து சேர்ந்தனர். பல முகங்களை எனக்கு தெரியாத போதிலும், நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். தினேஷ் மற்றும் கதிர் அனைவருக்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தெளிவாக விளக்கினார்கள். தினேஷ் மற்றும் பரணி சார் அவர்களால் எங்கள் பைகள், தார்பாய்கள் மற்றும் டென்ட்கள் அவரவர்கள் பைக்கில் நன்கு கட்டப்பட்டிருந்தது. என்னை பிரபாகர் பைக்கின் பின்னால் உட்காரச்சொன்னார்கள்.

மாலை 7.50 மணியளவில் நாங்கள் 19 அந்நியர்கள் 11 பைக்கில் பயணத்தைத் தொடங்கினோம். ஒரு நீண்ட விடுமுறை வார இறுதியாக இருந்ததால் செங்கல்பட்டு வரை பெரிய போக்குவரத்து நெரிசல்   இருந்தது. தினேஷ் எங்களுக்கு முன்னால் இருந்து வழிநடத்தினார் எங்கள் முதல் ஆணை அடுத்த செங்கல்பட்டு டோல் அருகே நிறுத்துவதாக  இருந்தது. மிகவும் உற்சாகத்துடன் நான் பிரபாகர் பைக்கின் பின்னால் சவாரி செய்ய ஆரம்பித்தேன். பின்னர் ஒவ்வொரு டோல் அருகே நிறுத்த எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இரவு 12:00 மணியளவில் திருச்சிக்கு சென்று ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எங்கள் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இருட்டை கிழித்துக்கொண்டு வேகமாக சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் இரவு உணவுக்காக நாங்கள் நிறுத்திவிட்டோம். பரணி சார் மற்றும் சிலர் எங்களை தாண்டி முன்னே சென்று விட்டனர். இரவு உணவுக்கு பின் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். திருச்சிக்கு முன்பு உளுந்தூர்பேட்டை (170KM)  வரை செல்ல இரவு 12:00 மணி ஆனது. CTC -ல் 12 மணிக்கு மேல் வாகனம் ஓட்ட தடை உள்ளதால் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தோம். பின்னர் தினேஷ், நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பின்னால் ஒரு லாரி ஓட்டுனர்கள் உணவருந்தும் சிறிய இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். . தினேஷ் மற்றும் கதீர் இங்கே வழக்கமான வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அங்கேயே ஓய்வெடுத்து அடுத்த நாள் காலை பயணத்தைத் தொடர முடிவு செய்தோம் இளமுருகு வின் குறட்டை ஒலி இருந்தபோதிலும், நாங்கள் எல்லோரும் சிறிது அரட்டை மற்றும் சிரிப்பொலிகளுக்குப் பின் சிறிது நேரம் தூங்கினோம்.

26.01.18 வெள்ளிக்கிழமை (350 KM)




காலை புதுப்பித்தல்களுக்குப் பிறகு, 6 மணியளவில் சூடான தேநீர் அருந்தி விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சில்லென்று காலை பனிக்காற்று மேனியை வருட மேகமலையை நோக்கி எங்கள் பைக்குகள் வேகமெடுத்தன. திருச்சிக்கு அடுத்து மணப்பாறை அருகே நாங்கள் சிற்றுண்டிக்காக நிறுத்தினோம். உணவுக்கு பின் தினேஷ் மற்றும் கதிர் மீண்டும் அனைவருக்கும் வரிசையாக செல்லவும் மற்றும் பாதுகாப்பாக செல்லவும் அறிவுறுத்தினார்கள். ஏனென்றால் திண்டுக்கல் முதல் தேனீ வரை ஒரு வழிப்பாதை மற்றும் வளைவுகள் அதிகம். நாங்கள் சிறிது நேரத்தில் திண்டுக்கல் அடைந்து, தேனிக்கு வலதுபுறமாக திரும்பினோம். கதிர் மற்றும்  தினேஷ், யாரும் அந்த வழியைத் தவறவிடாமல், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று உறுதிபடுத்தினார்கள். திண்டுக்கல் முதல் தேனி வரை வழியில் மஞ்சள் / பசுமை நிற ஆடைகள் அணிந்து பழனிக்கு பக்தர்கள் நடந்து செல்வதை கண்டோம்.
 உத்தமபாளையத்தில் தேநீர் இடைவேளைக்கு பைக்குகள் நிறுத்தப்பட்டது. நாங்கள் கதைகள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். சிறிது சிறிதாக நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அப்போது எல்லோரும் ஒரு குழு புகைப்படம் எடுத்துகொண்டோம். சின்னமனூர் எங்கள் அடுத்த நிறுத்தமாக இருந்தது. அங்கு ஒரு சிறிய மெஸ்சில் எங்கள் மதிய உணவை முடித்தோம். . தினேஷ் மற்றும் கதிர் 3 மணிக்கு முன்னர் மேகமலை சோதனை சாவடியை அடைய திட்டமிட்டிருந்தனர். ஆனால் சோதனை சாவடியை அடைய மாலை 4 மணி ஆனது. வன காவலர் அனுமதி கடிதம் அல்லது ஹோட்டல்  முன்பதிவு நகல் இல்லாமல் மேலே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு தினேஷ் நேரடியாகச் சென்று அலுவலருடன் பேசினார், நிறைய நேரத்திற்கு பிறகு அவர் எங்களை அனுமதித்தார். பசுமை போர்த்திய மேகமலை மலை சிகரங்கள் தூரத்தில் எங்களை வரவேற்றன. நாங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகான ஏரிகள் தாண்டி 13 கி.மீ. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொண்டை ஊசி வளைவு சாலைகளினூடே பயணித்து மேகமலை பஞ்சாயத்து அலுவலகத்தை (Highvayis office) அடைந்தோம். வழியில் ஆங்காங்கே நிறுத்தி புகைப்படம் எடுத்துகொண்டோம்.

 அனைவரும் சூடான தேநீர் அருந்தி புத்துணர்ச்சிக்கு பிறகு, நாங்கள் மகாராஜா மெட்டு செல்ல எங்கள் பைக்குகளில் பயணத்தைத் தொடங்கினோம். கரடுமுரடான சாலையில் சில கி.மீ தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. பாதி வழியில் நாங்கள் சூரியன் அஸ்தமனமாவதைக் கண்டோம் .. இருட்டுவதற்குள் நாங்கள் மஹாராஜா மெட்டுவை அடைய திட்டமிட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெளிச்சம் குறைய தொடங்கியதால், நாங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கே திரும்பி விட்டோம். அடுத்த நாள் அதிகாலையில் மீண்டும் வர முடிவு செய்தோம்.ஆரம்பத்தில் நாங்கள் கூடாரத்தில் (tent) தங்க திட்டமிட்டோம், இரவு வெளியில் மிகவும் குளிராக இருந்தது. பின்னர் பரணி சார், யாருடனோ பேசி எங்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இது மிகவும் வசதியா இருந்தது.  இதற்கிடையில் முரளியின் பைக் பஞ்சரானதால் அங்குள்ள மெக்கானிக் ஒருவர் சரிசெய்து கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சிறிது நேரம் அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு பிறகு நாங்கள் எல்லோரும் பஞ்சாயத்து அலுவலகம் சென்று எங்கள்  குளிர் போர்வையை (Sleeping bag) விரித்து அதனுள் கதகதப்பாக உறங்கினோம்.
 
27.01.18 சனி க்கிழமை (20 + 115 KM)
 
அதிகாலையில் மெதுவாக நாங்கள் ஒருவரையொருவர் எழுப்ப ஆரம்பித்தோம், காலை புத்துணர்ச்சிக்குப் பிறகு, 6 மணியளவில் சூடான தேநீர் அருந்தி, அனைவரும் சில புகைப்படம் எடுத்துகொண்டோம். தேயிலைத் தோட்டம் மூடுபனி மேகங்களால் மூடப்பட்டிருந்தது. மறுபடியும் நாங்கள் மஹாராஜா மெட்டுக்கு கரடுமுரடான சாலையை கடந்து எங்கள் பைக்குகளில் சென்றோம். அழகான ஏரிகள், அழகிய தேயிலைத் தோட்டம், சில்லென்று மேனியை வருடும் காற்று எல்லாமே அற்புதமான உணர்வு, அதை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. கரடுமுரடான சாலையில் பயணித்த களைப்பு,  மேகமலையின் இயற்கை அழகு காட்சிகளினால் அதை மறக்கச் செய்தது. மஹாராஜா மெட்டு சிகரத்தை அடைய சிறிது மேலே ஏற வேண்டியிருந்தது.  நாங்கள் அனைவரும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து மேகங்கள் தழுவும் மலையின் இயற்கை அழகை ரசித்தோம் மற்றும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு நாங்கள் மஹாராஜா மெட்டுவை விட்டு கீழிறங்கி பஞ்சாயத்து அலுவலகம் அருகே இரவு சாப்பிட்ட அதே கடைக்குச் சென்று சிற்றுண்டி அருந்தினோம்.
 
12 மணியளவில் நாங்கள் பைக்குகளில் வாகமனிற்கு செல்லத் தொடங்கினோம். குமுளி, தேக்கடி வழியாக செல்லும்  மலைச்சாலை நன்றாக இருந்தது, பாம்பை போல் வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கத்துடன் இந்த பாதை பயணிப்பதற்கு மகிழ்ச்சியைத் தந்தது. வழியில் ஒரு தேநீர் கடையில் நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது தான் எங்களில் ஒருவர் இல்லாதது தெரிந்தது. சுரேஷ் தான் காணவில்லை, அனைவரும் அவரை தேட முயற்சித்து அலைபேசி எண்ணை அழைத்தோம். ஆனால் பயனில்லை. பதில் வராததால் கதிர் அவரை பின்னோக்கி தேடிச் சென்றார். நாங்கள் முன்னோக்கி சென்று அவரை தேடினோம். ஒரு மணி நேரம் கழித்து சுரேஷ் ஸ்வாதியின் அழைப்பை எடுத்தபோது, ​​அவர் பாதுகாப்பாக வாகமனை அடைந்துவிட்டார் என்று தெரிந்ததும், நாங்கள் நிம்மதியாக உணர்ந்தோம்.


பின்னர் நாங்கள் மாலை 5.30 மணியளவில் வாகமனை நோக்கிச் சென்றோம். வாகமனில் ஒரு பாராகிளைடிங் விழா நடப்பதை கண்டோம். தாங்கள் பாறை மலையேறி, மலையின் அழகை அனுபவித்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு கடையில் அன்னாசிப்பழம், குலிக்கி ஷர்பத் சாறு மற்றும் உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிட்டோம் நாங்கள் உண்மையில் அந்த கடையை காலி செய்தோம். இன்னும் சிறிது நேரம் கழித்து கீழிறங்கி அவரவர் பயண அனுபவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இதற்கிடையில், தினேஷ், பரணி சார் மற்றும் கதிர் இரவு முகாம் அமைக்கும் இடத்தை தேடிச் சென்றனர்.

நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு கூடாரத்தை தினேஷ் உடன் தயாரிக்க ஆரம்பித்தனர். மற்றொரு குழுவில், நானும் பிரபாகரும் இரவு உணவும், தண்ணீரும் வாங்க கதிருடன் சென்றோம். இரவு உணவிற்கு பிறகு நாங்கள் வட்டமாக உட்கார்ந்தோம், தற்போதைய சவாரி மற்றும் அவர்களின் கடந்த சவாரி பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். தினேஷ்- ன் நேபாள பயணம் மற்றும் கதிரின்  யாம்தங் வேலி பயணம் & பிரபா- ன் எவரெஸ்ட் அடிப்படை முகாம் பயணம்". மற்றும் ஸ்வதி -ன் கதை கதிர் பயணம் பற்றி விவரிக்கும் போது அங்கேயே சென்று வந்த உணர்வை தந்தது. வேடிக்கை, சிரிப்பு மற்றும் அனுபவம் நிறைந்த இரவாக அன்று கழிந்தது.

செவ்வாய், 15 நவம்பர், 2016

சதாசிவ கோனா மலை - ஒரு தனிமைப் பயணம்

    
    நான் சமீபத்தில் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனா மலை பற்றி கேள்விப்பட்டேன்.  ஒரு நாள் அங்கு செல்ல நான் ஆர்வமாக  இருந்தேன். ஒரு அழகிய சிவன் கோவில் இம் மலை மேல் அமைந்துள்ளதால் இவ்விடத்திற்கு இப்பெயர் வந்தது. (கோனா- மலை என்று பொருள்) கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள நாகலாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நான் மலையேற்றம் செய்திருக்கிறேன்.  இந்த சதாசிவ கோனா மலை நாகலா புரத்தின் மற்றொரு பக்கத்தில் அமைந்துள்ளது. என் அண்டை வீட்டுக் குடும்பம் அக்டோபர் 1 அன்று இக்கோயிலுக்கு சென்று வர திட்டமிட்டிருந்தார்கள். நான் இந்த இடத்திற்கு செல்ல ஆர்வமாக இருந்த விஷயம் அவர்களுக்கு தெரியும்,  அதனால் என்னையும் அவர்கள் கூட வருமாறு அழைத்தார்கள். ஆனால் அடுத்த நாள் எனது நண்பர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தேன் அதனால் நான் அந்த நாளில் அவர்களோடு செல்லவில்லை.







அக்டோபர்  1 அன்று இரவு மற்ற நண்பர்கள் சில காரணங்களுக்காக மலையேற்றம் வர முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நான் தனியாக செல்வதா அல்லது வேண்டாமா என்பதில் சிறிய குழப்பம் இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும்  நான் மலை ஏறுவதற்கு தயாராக சில உணவுப் பொருட்கள் வாங்கி வைத்திருந்தேன். அன்று இரவு கடும் மழை பெய்யத்  தொடங்கியது மேலும் என்னை குழப்பத்தில்  ஆழ்த்தியது, சிறு சிந்தனையோடு இரவு உறங்கச் சென்றேன்.. அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது மழை நின்று விட்டிருந்தது, நான் தனியாக மலையேற முடிவு செய்து, உடனடியாக எழுந்து தயாரானேன். காலை 6.30 மணி அளவில் சதாசிவ கோனா மலை நோக்கி எனது பயணம் தொடங்கியது. ஏற்கனவே அங்கு முகாம் இட்டிருந்த எனது குடும்ப நண்பர்கள்  கூட  அல்லது தனியாக அதே நாளில் மலையேற்றம் செய்து சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தேன்.
சதாசிவ கோனா பற்றி : இறைவன் சிவன் சதாசிவ அவதாரமாக இம் மலை மேல் கோவில் கொண்டுள்ளதால் இவ்விடத்திற்கு சதாசிவ கோனா எனப்பெயர் வந்தது. சிவன் கோவில் மற்றும் அவருடைய மனைவி தேவி காமாட்சி கோவில் அருகே அழகிய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத அனைத்து திங்கள் ஆகிய தினங்கள் முக்கிய திருவிழாக்களாக இங்கே கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில பகுதிகளில் இருந்து வருகை தருகிறார்கள்.
இறைவன் சதாசிவ மற்றும் தேவி காமாட்சி வழிபாடு செய்த கார்வெட்டி நகர ராஜா அவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

சதாசிவ கோனா மலை சென்று அடைவது எப்படி: புத்தூர் பஸ் நிலையம் மற்றும் புத்தூர் ரயில் நிலையம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்கும் ஒரு தனியார் பேருந்து (Sri Sai Bus Service) உள்ளது.. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டும் பஸ் கிடைக்கும். தயவு செய்து பஸ் ஸ்டாண்ட் அருகே தேட வேண்டாம்.

நான் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.40 மணி திருப்பதி உள்ளூர் ரயில் மூலம் புத்தூர் ரயில் நிலையதிற்கு காலை 10.20 மணிக்கு சென்று சேர்ந்தேன். பயணத்தின் இடையே என் காலை உணவு (ரொட்டி) உண்டு முடித்தேன். நான் என் குடும்ப நண்பர் இடம் இருந்து சில தகவல்கள் சேகரித்திருந்தேன்.  T.R.Kandriga (Timma Raju Kandriga) கிராமத்திற்கு பயணிக்க மிக சில பேருந்துகள் மட்டும் உள்ளது அல்லது நாம் ஒரு கார் எடுத்து செல்ல வேண்டும் என்று சொன்னார். கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் அடைய நாம் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். நான் சந்தையில் சில ஆப்பிள்கள் வாங்கி பேருந்துக்கு காத்திருந்தேன். ஆனால் பேருந்து சில நிமிடங்கள் முன் சென்று விட்டதாக உள்ளூர் மக்கள் கூறினர். அதிர்ஷ்டவசமாக நான் அந்த கிராமத்தை அடைய ஒரு பகிர் வண்டி (share Auto) கிடைத்தது.  நான் ஏறி அமர்ந்ததும் மற்ற பயணிகள் இடங்களை நிரப்ப வண்டி காத்திருந்தது. எல்லோரும் என்னை கேட்டார்கள், நீங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் தனியாக போகிறீர்கள்களா? போன்ற கேள்விகளை. இறுதியாக வண்டி புத்தூர் நெடுஞ்சாலை உள்ளே சில கிலோமீட்டர்கள் சென்று, T.R.Kandriga கிராமத்து சாலையில் (15km) பயணித்தது. 30 நிமிடங்களில் பகிர் வண்டி என்னை கிராமத்தில் சென்று சேர்த்தது. வண்டி ஓட்டுனர் ரூ .20 வசூலிக்க நான் ஆச்சரியமடைந்தேன். பொதுவாக நீங்கள் ஒரு தனி வண்டி (Auto) எடுக்க வேண்டும் மற்றும் அவர்கள் ரூ 200 வசூலித்து விடுவார்கள். கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் (2km) நோக்கி நடந்து செல்ல தொடங்கினேன். 

நான் 12.00 மணி அளவில் மலை அடிவாரம் சென்று சேர்ந்தேன். அடிவாரம் அருகே ஒரு பழைய சிவன் கோவில் மற்றும் சிறிய குளம் பார்த்தேன். நான் சிவலயத்தில் பிரார்த்தனை செய்து என் மலையேற்ற பயணத்தை தொடங்கினேன். பாதை தெரியாத காட்டில் முதல் முறையாக தனியாக நடந்து செல்வது புது அனுபவமாக இருந்தது. முதல் நாள் மழை காரணமாக காலநிலை நன்றாக இருந்தது. இயற்கையை ரசித்தபடி அனுபவித்து மலை நோக்கி ஏறிக்கொண்டிருந்தேன். .நான் கைபேசியில் சில புகைப்படங்கள் / சுய புகைப்படங்கள் எடுத்து கொண்டே 1 மணி நேரத்தில் பாதி தூரம் சென்று அடைந்தேன். இங்கே நான் 2 சிறிய லிங்கங்கள் பார்த்தேன். என் மலை யேற்ற பயணத்தின் இடையில் நான் 2 - 3 நபர்கள் மலையிலிருந்து இறங்குவதை  பார்த்தேன், அவர்கள், என்னை அதே கேள்வியை கேட்டார்கள் நீங்கள் தனியாக போகிறீர்களா?. நான் ஆமாம் என்றேன். ஆனால் என் மனதில், கடவுள் இந்த மலையேற்ற பயணத்தில் என்னோடு கூட பயணம் செய்கிறார் மற்றும் நான் தனியாக இல்லை என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் நான் இலக்கை நோக்கி மலையேற தொடங்கினேன், சில நிமிடங்களுக்கு பிறகு நான் என் குடும்ப நண்பர், அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எதிரில் பார்த்தேன். அவர்களும், அதே கேள்வியை கேட்டார்கள் நீங்கள் தனியாக வந்தீர்களா என்று. அவர்கள் மலைபாதை நிலைமையை விளக்கினார்கள். முதல் நாள் மலை மேல் கடுமையான மழை பெய்ததாகவும், அவர்கள் கோவிலில் தங்கி உணவு சமைத்து உண்டதாகவும் சொன்னார்கள். முதல் நாள் மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் நன்றாக தண்ணீர் விழுவதாகச் சொன்னார்கள். அவர்கள் முதல் நாள் மலையேற 5-6 மணி நேரம் ஆனதாகவும், இறங்கும் போதும் அதே 5-6 மணி நேரம் ஆகும் என்று கூறினார்கள். ஆனால் நான் போகும் வேகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் மேலே சென்று சேர்ந்து விடுவீர்கள் என்று சொன்னார்கள். நீங்கள் எப்போது கீழே இறங்குவீர்கள் என என்னை கேட்டார்கள். நான் முடிந்தால் மாலையே கீழே இறங்கிவிடுவேன் என்று அவர்களுக்கு சொன்னேன். அவர்களிடமிருந்து விடைபெற்று மீண்டும் என் பயணத்தை தொடர்ந்தேன்.

மீண்டும் நான் சில நிமிடங்கள் காட்டில் தனியாக நடந்து சென்றேன், சிறிது நேரத்தில் பாதை சற்று சமதளமாக இருந்தது. வழியில் அங்கு சில குரங்குகள் பார்த்தேன். அவைகள் என்னை தொந்தரவு செய்யவில்லை. நான் காட்டில் இயற்கையை ரசித்தபடி பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் ஒலி கேட்டு மகிழ்ச்சியுடன் மரங்கள் அடர்ந்த காட்டின் இடையே நடந்து சென்றுகொண்டிருந்தேன். செல்லும் பாதை (Trail) மிகத் தெளிவாக இருந்தது, நான் எங்கும் திசை மாறிச் செல்ல முடியாது. செல்லும் வழியில் மரங்கள் மற்றும் பச்சை பசேலெனப் புல் நிறைய இருந்தது, வழியில் ஒரு இடத்தில் நான் என் கைபேசியில் வீடியோ எடுத்து கொண்டே நடக்க ஆரம்பித்தேன். இலக்கை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் போது சில நிமிடங்களில் தூரத்தில் தண்ணீர் விழும் ஒலி கேட்டு என் அட்ரினலின் வேகமாக சுரக்க ஆரம்பித்தது, சிறிது வேகமாக நடக்க ஆரம்பித்தேன். என் கைபேசி கேமரா இயற்கையின் அழகை விழுங்கி கொண்டே என்னுடன் பயணித்தது இடையில் நான் ஒரு சிறிய விநாயகர் கோயில் இருந்ததை பார்த்தேன். .  லயத்தில் மணி அடித்து வணங்கி விட்டு கீழே சில படிக்கட்டுகள் இறங்கி சென்றவுடன் பாதை ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி மற்றும் கோவில் அருகில் என்னை இட்டுச் செல்கிறது. நான் 1.45 மணி நேரத்தில் இலக்கை அடைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சதாசிவ கோவிலில் வணங்கி விட்டு சிறிது நேரம் தியானம் செய்தேன். நீர்வீழ்ச்சியின் ஒலி தன் கைகளை நீட்டி என்னை அழைப்பது போல் இருந்தது. உடனடியாக நான் என் உடையை நீக்கி விட்டு உள்ளாடையுடன் நீர்வீழ்ச்சி நோக்கி விரைந்தேன். நீர்வீழ்ச்சியின் குளியல் மசாஜ் செய்வது போல் ஒரு சிறந்த வலி நிவாரணமாக இருந்தது. கோயில் பூசாரி மற்றும் அவரது உதவியாளர் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. நான் என் விருப்பப்படி ஆசை தீர நீர்வீழ்ச்சியில் குளித்தேன். பிறகு என் பையில் வைத்து இருந்த என் மதிய உணவு அவல் சர்க்கரை உண்டு முடித்து, கோவிலில் உட்கார்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தேன்.

கோயில் பூசாரி, நான் இரவு அங்கு தங்குகிறேனா என்று என்னை கேட்டார். நான் இன்னும் எந்த யோசனையும் செய்யவில்லை என்று கூறினேன். சிறிது நேரம் கழித்து நான் அதே மலையில் சிவன் கோவிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காமாட்சி கோவில் சென்று சேர்ந்தேன். காமாட்சி கோவில் அருகிலும் அழகிய ஒரு நீர்வீழ்ச்சி இருந்தது. நான் கோவிலில் உட்கார்ந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். கோவிலில் தியானம் செய்தது எனக்கு புதிய தெம்பை கொடுத்தது. இயற்கை சூழலுடன் நீர்வீழ்ச்சி ஒலி, பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் ஒலி இவற்றின் ரம்மியமான சூழலில் என்னை நானே மறந்துவிட்டேன். இங்கே ஒரு பூசாரி இருந்தார், அவர் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். சிறிது நேரம் அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் காஞ்சி பெரியவர் இந்த மலையில் தங்கி இறைவன் சதாசிவன் மற்றும் தேவி காமாட்சி பூஜை / வழிபாடு செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். T.M.சேஷன் மற்றும் ஆர் வி வெங்கட்ராமன் போன்ற முக்கிய பிரமுகர்கள் மகா பெரியவருக்கு உணவு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்போது நேரம் மாலை 5.30 மணி, வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது. கோயில் பூசாரி, இன்றிரவு நான் அங்கு தங்குகிறேனா என்று என்னை கேட்டார். மற்றும் நீங்கள் எதுவும் உணவு உட்கொண்டீர்களா? என்று கேட்டார். கோவிலின் ரம்மியமான சூழல் நான் அங்கேயே வாழ்நாள் முழுதும் தங்கி விட வேண்டும் என்று ஒரு உணர்வு எனக்குள் எழுந்தது, எதையும் சிந்திக்காமல் பூசாரியிடம் 'ஆம்' என்று கூறினேன். இரவாகிக்கொண்டிருந்தது, கோவிலில் தனியாக உட்கார்ந்து இயற்கையை ரசித்தபடி அமர்ந்திருந்தேன். நான் இரவு அங்கு தங்க போகிறேன் என்று என் வீட்டில் தகவல் சொல்லவில்லை. கைபேசி அங்கு சிக்னல் கிடைக்காததால் செயல்படாது. ஆனால் நான் இந்த கோவிலுக்கு செல்கிறேன், என் அண்டை வீட்டுக் குடும்பம் அங்கு ஏற்கனவே தங்கி உள்ள விஷயம் அவர்களுக்கு தெரியும்,  எனவே நான் அங்கு தங்க கவலைப் படவில்லை.

இரவு 8.00 மணி அளவில் உணவு உண்டு முடித்து அமர்ந்திருந்தேன். பூசாரியின் உதவியாளர் எனக்கு இரவு தூங்க ஒரு பாய் கொடுத்தார். மாலை இங்கே சில குரங்குகள் எங்களுக்கு தொந்தரவு கொடுத்தன. இரவில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் என்னை தூங்க விடாமல் தொல்லை கொடுத்தன. கொசு கடியின் இடையே நான் சிறிது நேரம் தூங்கினேன்.

காலை 6.00 மணி அளவில் கண் விழித்தேன். காலை கடன்களை முடித்து அருவியின் கீழே உள்ள குளத்தில் குளித்து புத்துணர்ச்சியுடன் காமாட்சி கோவிலில் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தேன். சிறிது நேரம் கழித்து காமாட்சி கோவிலில் இருந்து மீண்டும் சிவன் கோவில் சென்று சேர்ந்தேன். மறுபடியும் சிவன் கோவில் அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஆசை தீர குளித்தேன்.  7.00 மணி அளவில் சிவபெருமானின் அனுமதி பெற்று மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். 

சூரிய ஒளி மேலெழுந்து வெப்பம் என்னை தாக்கும் முன் கீழிறங்க விரும்பினேன். அதனால் சிறிது வேகமாக நடக்க ஆரம்பித்தேன், மீண்டும் 1.45 மணி நேரத்தில் மலை அடிவாரம் சென்று அடைந்தேன். பயணத்தின் இடையில் நான் 2 - 3 நபர்கள் மலை ஏறுவதை  பார்த்தேன், மது அருந்தவும், மாமிசம் சமைத்து சாப்பிடவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் மக்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள்.  இந்த இடத்திற்கு வருகை தரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.  ஆனால் அரசாங்கம் இந்த மலையை பாதுகாக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஒரு சுற்றுலாத்தளம் போல மலையெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் நிறைய பார்த்தேன். 8.45 மணி அளவில் மலை அடிவாரம் சென்று அடைந்தேன். என் பையில் வைத்து இருந்த காலை உணவு (ரொட்டி) உண்டு முடித்தேன்.
கிராமத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தேன். நான் அந்த கிராமத்தை அடையும் போது ஒரு பகிர் வண்டி (share Auto) கிராமத்தை விட்டு நகருவதை பார்த்தேன். நகரும் வண்டியை நான் நிறுத்துமாறு கத்திகொண்டே ஓடினேன். பகிர் வண்டி டிரைவர் என் குரல் கேட்டு சில கெஜ தூரம் சென்று பிறகு நிறுத்தினார். உடனே ஓடி சென்று ஆட்டோவில் ஏறினேன். புத்தூர் ரயில் நிலையம் நோக்கி பகிர் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. மலை மெதுவாக எனக்கு பின்னால் நகர்ந்து என் பார்வையில் இருந்து சிறியதாக ஆரம்பித்தது. ஆனால் இன்னும் என் மனதில் அந்த நினைவுகள் பசுமையாக  உள்ளன.

மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி நான் என் இரண்டு நண்பர்களுடன் இந்த இடத்திற்கு ஒரு நாள் சென்று வந்தேன்.


. 

செவ்வாய், 30 ஜூலை, 2013

திருவண்ணாமலை - எனது தீப தரிசன மலையேற்ற அனுபவம் (டிசம்பர் 2012)

எனக்கு கார்த்திகை தீபம் நாளன்று திருவண்ணாமலையில் தீப தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கார்த்திகை தீப நாளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பத்து நாள் திருவிழாவின் ஒரு வார இறுதி நாளன்று (ஞாயிறு, டிசம்பர் 2 ஆம் தேதி) நாங்கள் கார் மூலம் செல்ல முடிவு செய்தோம். என் நண்பர்களில் ஒருவர் வெங்கடேஷ், அவரிடம் கார் உள்ளது. நாங்கள் மூன்று பேரும் (நான், வெங்கடேஷ் மற்றும் பாஸ்கர்) காலை 6 மணி  அளவில் ஒரு பொதுவான இடத்தில் கிண்டி அருகே சந்திக்க முடிவு செய்தோம்.




நான் காலையில் 5 மணி அளவில் மற்ற 2 பேர்களை தொலைபேசி மூலம் அழைக்க முயற்சி செய்தேன். பாஸ்கர் 5 மணி அளவில் என்னை அழைத்து தயாராக இருப்பதாக சொன்னார். ஆனால் வெங்கடேஷ் அழைப்பை எடுக்கவில்லை. நான் காலை உணவு மற்றும் மதிய உணவு செய்து எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன். நேரம் 6.00 மணி மீண்டும் தொலைபேசி அழைப்பை வெங்கடேஷ் எடுக்கவில்லை.  நாங்கள் இரண்டு பேரும்(நான் மற்றும் பாஸ்கர்) பஸ் மூலம் திருவண்ணாமலை செல்ல முடிவு செய்து, CMBT செல்ல எனது பைக் ஸ்டார்ட் செய்த போது, அலைபேசி அழைப்பு ஒலித்தது, வெங்கடேஷ் அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வருவதாக சொன்னார்.  நாங்கள் எங்கள் திட்டப்படியே கிண்டி அருகே சந்திக்க முடிவு செய்தோம். நான் மற்றும் பாஸ்கர் 7:00 மணி அளவில்  கிண்டி சென்று சேர்ந்தோம். சில போக்குவரத்து காரணங்களுக்காக வெங்கடேஷ் 7:20 மணி அளவில்  அங்கு வந்து சேர்ந்தார். இறுதியாக 7:30 மணி அளவில் எங்களது திருவண்ணாமலை பயணம் கார் மூலம் அங்கு இருந்து தொடங்கியது.



நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்வது ஒரு அற்புதமான அனுபவம். வெங்கடேஷ் ஒரு தேர்ந்த கார் ஓட்டுனர், போல் காரை வெகு இலகுவாக ஓட்டிச்சென்றார். காலை 9 மணி அளவில் மதுராந்தகம் அருகே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி எங்களது காலை சிற்றுண்டியை முடித்தோம். 

நாங்கள் 11:00 மணி அளவில் திருவண்ணாமலை கோவிலை சென்று சேர்ந்தோம் எங்கள் காரை நிறுத்த ஒரு இடம் கண்டுபிடிக்க எளிதாக இல்லை. கோவில் அருகில் எங்கள் காரை நிறுத்த முயற்சி செய்து 15-20 நிமிடங்கள் சுற்றி இறுதியாக வடக்கு கோபுரம் நுழைவாயில் அருகிலுள்ள இடத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். முகம் கை கால்கள் கழுவி அண்ணாமலையாரை தரிசனம் செய்ய கோவிலுக்கு உள்ளே சென்றோம். அண்ணாமலையாரை தரிசனம் செய்து பிறகு உணவு அருந்தினோம். அப்போது மதியம் 1.30 மணி ஆகும். கிரிவலம் செல்வோமா அல்லது மலையேறி தீப தரிசனம் செல்வோமா என்று பேசிக்கொண்டிருந்தோம். நேரம் குறைவாக உள்ளதால் கிரிவலமும் தீப தரிசனமும் ஒரே நாளில் செய்ய முடியாது இறுதியாக நாங்கள் மகா தீபம் அருகில் பார்க்க மலை ஏற முடிவு செய்தோம். 



தண்ணீர் மற்றும் உணவு பை சுமந்து கொண்டு மதியம் 2.00 மணி அளவில் திருவண்ணாமலையில் தீப தரிசனம் செய்ய எங்கள் பயணம் தொடங்கியது. யாரோ நாங்கள் மலை மீது காலணிகள் அணிந்து செல்லக்கூடாது என்றார்கள். ஆனால் எங்களுக்கு காலணிகள் இல்லாமல் ஏற எளிதாக இல்லை. எனவே காலணிகளுடன் நடக்க முடிவு செய்தோம். முதலில் நாம் ஏறும் போது ஒரு சாதாரண படி இருந்தது, அதன் பிறகு அது ஒரு  கடினமான பாறைகள் நிறைந்த மலைப்பாதையாக தொடர்ந்தது.  நாங்கள் சோர்வாக இருக்கும் போது தண்ணீர் குடித்து சிறிது ஓய்வு எடுத்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். இடையில் நாங்கள் கீழே செல்லும் மக்கள் சிலரை தொலைவை பற்றி கேட்டதற்கு அவர்கள் அருகில் தான் உள்ளது என்றார்கள். ஆனால் அது நடக்க நடக்க சென்று கொண்டே இருக்கிறது .... பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். பின்னர் அவர்கள் இலக்கை அடைவதற்கு நம்மை ஊக்குவிக்கும் விதமாக சொன்ன பதிலே என்று உணர்ந்தேன். ஆனால் பாதி வழியில் ஒருவர் நீங்கள் ஏற முடியவில்லை என்றால், இப்போதே முடிவு எடுத்து இங்கு இருந்து திரும்ப இறங்கி விடுங்கள், இல்லையென்றால் நீங்கள் அவதிப்படுவீரகள் என்று கூறினார். இந்த பலவீனமான நபர் (மலைகள் ஏறும் அனுபவம் இல்லாதவர் அல்லது அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) சொன்ன நம்பிக்கை இழக்க வைக்கும் பேச்சு என்னை சற்று கோபப்படுத்தியது. நான் உடனே எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு மற்றும் மலை ஏறிய அனுபவம் உண்டு ஆதலால் மலை ஏறாமல் திரும்ப செல்ல மாட்டேன் என்றேன். (எனக்கு ஏற்கனவே மலைகள் சில ஏறிய அனுபவம் உண்டு).  மற்றும் நீங்கள் இது போல். நம்பிக்கை இழக்க வைக்கும் மாதிரி பேசாதீர்கள் என்றேன். பின்னர் அவர்கள் தங்கள் வாயை மூடிக்கொண்டு கீழே சென்று விட்டார்கள். 




நாங்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்காமல் அடிக்கடி சிறிது ஓய்வு எடுத்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். 4:30  மணி அளவில் மலை மேல் சென்று சேர்ந்தோம். மகா தீபம் சென்று அடைய எங்களுக்கு ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் ஆனது.



மலை மேல் வீசிய சில்லென்ற காற்று எங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. மலை எங்கிலும் மூலிகைகள் நிறைய இருந்தன, ஆனால் எங்களுக்கு அவற்றின் பெயர் தெரியாது. யாரோ ஒருவர் மலை ஏறும் வழியில் சர்க்கரை வில்வம் ஒரு மூலிகை கொடுத்து சுவைக்க கூறினார். அந்த இலை மிகவும் இனிப்பாக இருந்தது. மலை ஏறும் வழியில் நாங்கள் வெளிநாட்டவர்கள் சிலரை சந்தித்தோம். ஒரு வெளிநாட்டவர் மலை  மீது. கடவுள் சிவன் மீது சம்ஸ்கிருத பக்தி பாடல்கள் பாட தொடங்கி  விட்டார்.



நாங்கள் மேலே சென்ற போது தீபம் அணைக்கப்பட்டிருந்தது. கோவில் ஊழியர்கள் செப்பு கொப்பரையில் அதிக அளவில் கற்பூரம், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி துணியாலான திரி கொண்டு ஒரு பெரிய தீபம் ஏற்ற தயார் செய்து கொண்டிருந்தனர்.. செப்பு கொப்பரை 3 டன் எண்ணெய் கொள்ளளவு உள்ளது கோவில் ஊழியர்கள் மாலை 6.00 மணி அளவில் தீபம் ஏற்றப்படும் என்று கூறினர். நாங்கள் சூரியன் மறையும் முன் மலை மேல் சென்று தீப தரிசனம் செய்த பிறகு உடனடியாக கீழே வரும் முடிவு செய்திருந்தோம். ஆனால் தீபம் ஏற்ற நேரம் ஆகும் என்பதால் அங்கு காத்திருக்க முடிவு செய்தோம். நான் தயாரித்து கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்டோம். உணவு உண்ட பிறகு எங்களுக்கு சற்று தெம்பு வந்ததாக உணர்ந்தோம். 

சரியாக 6.00 மணி அளவில் மகா தீபம்  ஏற்றப்பட்டது. மலை எங்கிலும் "ஹரஹரா", "ஹரஹரா" என்ற ஒலி  பிரதிபலித்தது. அந்த இடத்தில் இப்போது ஒரு ஆன்மீக அலை நிரப்பப்பட்ட அனுபவமாக இருந்தது. தீப தரிசனம் செய்த பிறகு நாங்கள் மலையில் இருந்து கீழே  இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்க மிகவும் கடினமாக இருந்தது, ஏனெனில் பாதை மிகவும் பாறை  நிறைந்ததாகவும் மற்றும் சூரிய ஒளி  குறைந்து கொண்டே இருந்தது, மெதுவாக நாங்கள் மலையில் இருந்து கீழே  இறங்க ஆரம்பித்தோம். எனது தொடை மற்றும் முழங்கால் பகுதி தசை பிடிப்புகள் காரணமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இறுதியாக நாங்கள் 8.00 மணியளவில் மலையில் இருந்து கீழே வந்து சேர்ந்தோம் . நாங்கள் சிறிது ஓய்வெடுத்து முகம் கை கால்கள் கழுவி 8:45 மணியளவில், சென்னை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. இரவு 11:45 மணியளவில் நாங்கள் சென்னை (கிண்டி) வந்து சேர்ந்தோம்.



கால் வலி எல்லோருக்கும் 3 நாட்கள் நீடித்தது ஆனால் திருவண்ணாமலை தீப தரிசனம் மற்றும் மலையேற்ற நினைவுகள் எப்போதும் நீண்ட காலம் இருக்கும்.

திருவண்ணாமலை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்:

திருவண்ணாமலை சென்னையில் இருந்து 185 கி.மீ மற்றும் பெங்களூரில் இருந்து 210 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மலை சுமார் 2.669 அடி உயரம் ஆகும். தென்பெண்ணை  ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணை திருவண்ணாமலை அருகே உள்ள சுற்றுலா தலமாகும். திருவண்ணாமலையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள செஞ்சி கோட்டைமற்றொரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.

திருவண்ணாமலை பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் பஞ்சபூத தலமாகும் . சிதம்பரம், ஸ்ரீகாலஹஸ்தி , திருவானைக்காவல் மற்றும் காஞ்சிபுரம் முறையே ஆகாயம் , காற்று, நீர் மற்றும் பூமி குறிக்கும் மற்ற பஞ்சபூத தலங்களாகும். திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு பிரம்மோத்சவங்ள்  கொண்டாடப்படும், இதில் மிகவும் புகழ்பெற்றது கார்த்திகை (நவம்பர் / டிசம்பர்) மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் ஆகும். கார்த்திகை தீபம் பத்து நாள் கொண்டாடப்படும் நிகழ்வு ஆகும். அன்று மாலை நேரத்தில் ஒரு பெரிய கொப்பரையில்அண்ணாமலை மலை மேல் மூன்று டன் நெய் ஊற்றி பெரிய விளக்கு ஏற்றப்படும்.

ஒவ்வொரு பௌர்ணமி முழு நிலவு இரவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலை மலையை சுற்றி கிரிவலம்  வந்து சிவ வழிபாடு செய்வர்கிரிவலம் பாதை 14 கிமீ தூரத்தை  உள்ளடக்கியது. தமிழ் காலண்டர் ஆண்டில் வருடாந்திர சித்ரா பௌர்ணமி (முழு நிலவு) இரவு, உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித நகரம் வருகை தருவார்கள் .

குரு ரமண மகரிஷி ஐம்பது மூன்று ஆண்டுகள், 1950 ஆம் ஆண்டில் அவர் தனது பூதவுடலை விடும் வரை திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அவரது ஆசிரமம் அண்ணாமலை மலை அடிவாரத்தில் மேற்கே அமைந்துள்ளது.


கார்த்திகை மகா தீப விழா

கார்த்திகை மகா தீபம் திருவண்ணாமலை மற்றும் வட ஆற்காடு பகுதியில் ஒரு பெரிய திருவிழா ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி நாள் அன்றும் 5 லட்சம் மக்கள் திருவண்ணாமலை வருகை தருவார்கள், கார்த்திகை மகா தீபவிழா நடைபெறும் 10 நாட்கள் திருவண்ணாமலையில், 80 - 90 லட்சம் மக்கள் வரை வருகை தருவார்கள். கார்த்திகை தீபம் நாளில் 2900 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நேரத்தில் திருவண்ணாமலை அதன் உயர் ஆன்மீக நிலையை அடைகிறது இந்த பெரும் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.


இந்த பெரும் திருவிழாவின்  தத்துவ உண்மை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்:
பிரம்மா மற்றும் விஷ்ணு தங்கள்  தங்களது மேன்மையை பற்றி இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இதற்கு ஒரு முடிவை கொடுக்க, அவர்கள்  பொறாமையை  அழிக்க சிவன் ஒளிவீசும் பெரிய மலை வடிவில் அவர்களுக்கு முன் தோன்றினார். இரண்டு பேரும் சிவனுடைய அடியையும் முடியையும்  கண்டுபிடிக்க முயற்சி செய்து அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள் இரண்டு பேரும் சிவனடைய கருணை பார்வையை வேண்டினர். அவர் கார்த்திகை மாதம் கார்த்திகை நாள் ஒவ்வொரு ஆண்டும் மலை மேல் ஜோதி வடிவில் தோன்றுவேன்   என்று அவர்களை ஆசிர்வதித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கார்த்திகை தீப திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் நடத்தப்படுகிறது.




நெருப்பு எப்படி எல்லாவற்றிலும் உள்ள அசுத்தத்தையும் அழிக்கிறதோ  அதே  போல், கடவுள் மனிதர்களில் உள்ள அறியாமை மற்றும் தற்பெருமை எனும் இருள் அழிக்க, ஞானம் எனும் ஒளி மூலம் அவர்களை ஆசிர்வதிக்கிறார்,  இதுவே  இந்த திருவிழாவின் பின்னால் உள்ள தத்துவ உண்மை.


மலை மேல் ஒரு பெரிய செப்பு கொப்பரையில் நிறைய கற்பூரம், நெய் மற்றும் துணியாலான திரி கொண்டு ஏற்றப்பட்டும் பெரிய தீபம்பல மைல்கள் அப்பால் இருந்து பார்த்தாலும் தெரியும். நம் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் இதுபோல் ஒரு பெரிய தீபம் இல்லை. கோவிலில் உள்ள பதினோரு அடுக்கு கோபுரத்திலும் அகல் விளக்கு வரிசையாக ஏற்றப்படும்இந்த திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பு என்றாலும், இது தமிழ் நாட்டில் விஷ்ணு கோயில்கள் உள்ளிட்ட தென் இந்தியாவின் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் கூட அழகான வரிசைகளில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் அலங்கரிக்கின்றன


எனது ஆங்கில வலைப்பதிவு http://interestingindianravi.blogspot.in/2012/12/trekking-to-thiruvannamalai.html

எனது ஹிந்தி வலைப்பதிவுhttp://merabharatmahan-ravisankar.blogspot.in/