சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பர்வத மலை பற்றி நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே அதைப்பற்றி விவரங்கள் சேகரித்தேன். பர்வத மலை, திருவண்ணாமலை மற்றும் போளூர் அருகிலுள்ளது. பர்வத மலை திருவண்ணாமலையில் இருந்து 37 KM – ம், போளூர்-ல் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எனது நண்பனை பர்வத மலை செல்ல துணைக்கு அழைத்தேன். அவரும் வர சம்மதித்து, அவரும் நானும் சேர்ந்து பர்வத மலை செல்ல முடிவெடுத்தோம். பேருந்தில் திருவண்ணாமலைக்கு மாலை 7.00 மணி அளவில் சென்று சேர்ந்தோம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறிது நேரத்தில் தரிசனம் செய்தோம். பர்வத மலை செல்ல திருவண்ணாமலையில் இருந்து பஸ் மூலம் தென்மாதி மங்கலம்(தென்மகாதேவமங்கலம்) கிராமத்தில் இரவு 10.00 மணி அளவில் சென்று சேர்ந்தோம். தென்மாதி மங்கலம் பர்வத மலையின் அடிவாரம் ஆகும். மலை ஏற மூன்று வழிகள் உள்ளன. ஒன்று தென்மாதி மங்கலம் வழியாகவும், இரண்டாவது மாம்பாக்கம் வழியாகவும், மற்றொரு வழி கடலாடி அருகிலுள்ளது. இரவு நேரம் இந்த மலை ஏற சிறந்த நேரம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் காலநிலை குளுமை என்பதால் நாம் களைப்படையமாட்டோம் என்பதாலும் இரவில் ஏற முடிவு செய்தோம். நாங்கள் பர்வத மலை முதல் முதலாக செல்கிறோம் ஆனால் மனதில் ஒரு திட நம்பிக்கையுடன் சென்றோம். தென்மதிமங்கலம் செல்லும் போது முன் பின் அறியாத ஒரு நபரை (நண்பர்) சந்தித்தோம். அவர் நன்றாக பர்வத மலை பற்றி அறிந்தவர் மேலும் பர்வத மலை பலமுறை சென்றவர், அதனால் அவரின் வழிகாட்டுதலின் படி நடப்பது என்று முடிவு செய்தோம். தென்மாதிமங்கலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக மலையின் அடிவாரம் சென்று சேர்ந்தோம். குளித்து விட்டு மலையேறினால் புத்துனர்சியாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால், பொது குளியலறையில் 5 ரூபாய் கொடுத்து குளித்து முடித்தோம். (மலை அடிவாரத்தில் குளிப்பதற்கும், காலைக் கடன்களை முடிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது)
இரவு 11.30 மணி அளவில் மலையை நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது. தண்ணீர், பிஸ்கட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய் இன்னபிற பூஜை பொருட்களுடன் டார்ச் லைட் சகிதம் காலில் செருப்பு அணியாமல் (செருப்பு அணியக்கூடாது) மலையேற ஆரம்பித்தோம். மலை மேலே திருப்பணிகள் நடைபெற்று வருவதால் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
பர்வதம் என்றால் மலை, பர்வத மலை என்று அழைக்கப்படும் இது மலைகளின் ராணியாக விளங்கும் பர்வத ராணி அல்லது பர்வதம்மாள் என்கிற இறைவி வசிக்குமிடம். பர்வத ராணி சக்தி அம்சமாகவும் மற்றும் 'சிவ' அம்சமாக இறைவன் மல்லிகார்ஜுனர் வடிவிலும் மலை உச்சியில் வீற்றிருக்கின்றனர். இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். இறைவி பர்வத ராணி, பிரம்மராம்பிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.
கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்று தெரியாது, கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள கடப்பாரை மலை என்ற செங்குத்து பாறை மலை மேல், ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'மா மன்னன்' என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்றும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.
மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு அற்புதமான காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது . மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கை அழகை கண்டு இரசிக்கலாம் (மேகங்கள் இல்லாத போது) கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த மலை மேல் அரிய மூலிகை தாவரங்கள் நிறைய காணப்படுகிறது. இமயமலை தவிர மற்ற மலைகள் மேல் அவை காணப்படுவதில்லை. பக்தர்கள் மலை மேல் ஏறும்போது அல்லது கீழே வரும் போது எளிதாக 'மூலிகை காற்று' வாசனையை உணரலாம் . 'மூலிகை காற்று' நம் மீது பட்டால் பல நோய்கள் தானாகவே குணமாகி விடும் என்று கூறப்படுகிறது.
சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரம் ஆனது. வழியில் சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்(தற்காலிக கடைகள்) இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், இட்லி எல்லாமே கிடைக்கும். இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். அதற்குள் டி சர்ட் பனியன் ஆகியவை தெப்பமாக நனைந்துவிட அவற்றையும் கழற்றிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். வழியில் சில இடங்களில் சில நிமிடம் ஓய்வெடுத்தோம். அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்.
வழியில் காட்டு விலங்குகள் அல்லது விஷ பூச்சிகள் என்று எதுவுமிருப்பதாக தெரியவில்லை. வயதான மக்கள் கூட மன உறுதி இருந்தால் மலை மீது ஏறிட முடியும். இதுவரை பர்வத மலை வரலாற்றில், பக்தர்கள் கீழே விழுந்து மற்றும் மரணம் சந்தித்ததாக எந்த பதிவும் இல்லை.
சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வதுண்டு. அவர்களை சாதாரணமாக பார்க்க முடியாது. அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி , சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம் அவர்கள் கடப்பதை அறியலாம். சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர் (நாய்), போன்ற வடிவத்தில் உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறும் வரை காட்சி கொடுப்பார்கள்.
நாங்கள் மலை ஏறும்போது, மழை பெய்ய தொடங்கியது, எங்களுக்கு சில அடி தொலைவில் ஒரு நாய் குரல் கேட்டது அது எங்களுக்கு அருகில் தங்குமிடம் உள்ளது என்பதை உணர்த்துவதாக இருந்தது. நாங்கள் அந்த மழையில் நனைந்தவாறு சிறிது மேலேறியவுடன் சிறு தங்குமிடம் காணப்பட்டது. சில நாய்கள் அங்கு பார்த்தேன், பக்தர்கள் பாதை தவறி விட்டால் இந்த நாய்கள் நமக்கு வழிகாட்டும் என்றார்கள். இரவு பக்தர்களுக்கு வழிகாட்ட பாறைகள் மற்றும் சில மரங்களில் வழி காட்டும் அம்பு குறிகள் பார்த்தேன்.
முதல் முறை ஏறும் போது 3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் எடுக்கும். முன்பு மக்கள் இந்த மலை மீது முழு நிலவு இரவு மட்டும் ஏறினார்கள். இப்போது மக்கள் ஒவ்வொரு வார இறுதிகளில் மற்றும் அனைத்து முக்கியமான நாட்களில் கூட ஏறுகின்றனர் .
பின்பு கரடுமுரடான, கற்கள் நிறைந்த மலைப்பாதையில் (மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் நீரோடை பாதை வழியே) ஒருமணி நேரம் நடந்தோம். சில நிமிடங்களில் கடப்பாரைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள்.அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டுதான் ஏற வேண்டும். அந்த சமயத்தில் மேலே ஏறிக் கொண்டிருந்தது நாங்கள் 3 பேர் மட்டுமே.
இந்த கடைசி பகுதி மலையேறுதல் சற்று கடினமாக இருக்கும். நாங்கள் அதிகாலை 3.40 மணி அளவில் கோவிலை சென்று சேர்ந்தோம். அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் மிக வெண்மையாக மிக அழகிய காட்சியாக இருந்தது. ஆலயத்தின் உள்ளே ஏற்கனவே இருந்த பக்தர்கள் வெளியேறியபின் சற்று நேரம்கழித்து உள்ளே சென்றோம். கோவிலில் கதவுகள் மற்றும் பூசாரி இல்லை. வட இந்தியா போன்று, இங்கே மக்கள் தாங்களே அபிஷேகம் பூஜைகளை' செய்யலாம். நண்பர் அவரே ஸ்லோகங்கள் சொல்லி அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த பூஜை பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபட்டோம். அமைதியான அந்த சூழலில் நாங்கள் சிறிது நிமிடம் தியானம் செய்தோம்.
பூஜைக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்து காலை 6 மணியளவில் கீழே இறங்க ஆரம்பித்தோம். இரவில் நாங்கள் மேலே ஏறும் போது வழி ஓரளவு ஆபத்தானது என்று தெரியவில்லை. ஆனால் பகலில் கீழே இறங்கும் போது தான் தெரிகிறது, நாங்கள் கடந்து வந்த பாதை ஓரளவு ஆபத்தானது என்று. முதல் சில கிலோமீட்டர் தொலைவு சமதள பரப்பாகவும், இரண்டாவது சில கிலோமீட்டர் படிப்பாதையாகவும் , மூன்றாவது சில கிலோமீட்டர் தொலைவு மலைப்பாறை பாதையாகவும் மற்றும் நான்காவது கடப்பாரை பாதையாகவும் (500 அடி) இருந்தது (இது மிகவும் கடினமான உள்ளது).
பர்வத மலை மீது ட்ரெக்கிங் (மலையேற்றம்) சென்று வந்த பிறகு குறைந்தது 2 நாட்களுக்கு, கால்வலி இருக்கும். நாங்கள் இறுதியாக காலை 10.00 மணி அளவில் கீழே வந்து சேர்ந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக